ஞானியுடன் நடந்த தூரம்
வ ருடம் பற்றிய ஞாபகக் குழப்பம். தேதியையும் மாதத்தையும் பற்றிய கலங்கல். இரண்டையும் கடந்து கோவை ஞானி என்ற கி. பழனிச்சாமியை முதலாவதாகச் சந்தித்த ஞாயிற்றுக்கிழமை நினைவின் ஆழத்தில் இன்னும் மின்னுகிறது. கல்லூரி நண்பரும் அன்றைய இலக்கியத் தோழருமான விஸ்வ நாதன் (பாதசாரி) காலையிலிலேயே வீட்டுக்கு வந்து சாயங்காலம் ஞானி நடத்தும் இலக்கியக் கூட்டத்துக்குப் போகலாமென்று சொல்லிவிட்டுப் போயிருந்தார். போக வேண்டுமா வேண்டாமா என்று தடுமாறுகிற விதத்தில் அந்த மாலை நேரத்தை வேறு காரணத்துக்காக ஒதுக்கி யிருந்தேன். நாங்கள் வசித்த கோவை ராமநாதபுரம் பகுதியில் பங்கஜா ஆலை இருக்கிறது. நீண்ட காலம் மூடிக்கிடந்த ஆலை அப்போதுதான் மீண்டும் திறக்கப்பட்டு இயங்க ஆரம்பித்திருந்தது. அந்த ஆலைத் தொழிலாளர்களின் குடியிருப்பும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தான். நிர்வாகக் குளறுபடிகளால் குடியிருப்புக்கான அடிப்படை வசதிகள் இல்லாமலிருந்தன.குடிநீருக்காக அந்த வீட்டுப்பெண்கள் எங்கள் தெருவில் குழாயுள்ள வீடுகளைத் தான் நம்பியிருந்தார்கள். எங்கள் வீடும் அதில் ஒன்று. மாலையில் தண்ணீர் விநியோக...